பில்கிஸ் பானு வழக்கு: 11 பேரை முன்கூட்டியே, விடுவிக்க மத்திய அரசு அனுமதி!

பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்தது என, உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். மேலும், அவருடைய மூன்று வயது மகள் உள்பட, அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கண் முன்னே கொடூரமாக கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற 11 பேரை, குஜராத் அரசு கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று விடுதலை செய்தது.
இந்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நேற்று, குஜராத் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், நன்நடத்தை அடிப்படையில், குற்றவாளிகள் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததாக, குறிப்பிடப்பட்டுள்ளது.