நாகரிகம், கலாசாரத்தின் பிறப்பிடமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழின் சங்க இலக்கியங்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய பொக்கிஷம் என குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, சென்னை அண்ணா பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரை:
நாகரிகம், கலாசாரத்தின் பிறப்பிடமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழின் சங்க இலக்கியங்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய பொக்கிஷம்; திருக்குறளில் பொதிந்துள்ள மகத்தான ஞானம் பல நூற்றாண்டுகளாக அனைவரையும் வழிநடத்தி வருகிறது.
தமிழகத்திலிருந்து தோன்றிய பக்தி மரபு துறவிகள் மூலம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. இங்குள்ள கோயில் கட்டடக் கலை, சிற்பங்கள் மனிதகுலத்தின் திறமைக்குச் சான்று.
பெண் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்வது நாட்டின் முன்னேற்றத்தில் முதலீடு செய்வதற்குச் சமம். படித்த பெண்களால் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை வழங்க முடியும்; பல்வேறு துறைகளில் தலைமைத்துவத்தை வழங்க முடியும்; சமூகத்தில் நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
மிகவும் போட்டி நிறைந்த இன்றைய சூழலில், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம், நல்ல நிறுவனங்களில் சேர முடியாது என்ற பயம், மதிப்புமிக்க வேலை கிடைக்காதோ என்ற கவலை, பெற்றோர் மற்றும் சமூகத்தின் எதிர்பார்புகளின் சுமை ஆகியவை நம் இளைஞா்களிடையே கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
எந்தவொரு பதற்றத்துக்கும் மாணவா்கள் ஆளாகக் கூடாது. பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, மாணவா்கள் எதிர்கொள்ளும் பல சவால்களைக் கடந்து செல்ல உதவ வேண்டும்.
வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் தொடங்கும்போது, மாணவா்கள் தங்கள் இலக்குகளை உயா்வாக நிர்ணயிக்க வேண்டும். அதே வேளையில் இலக்குகளால் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்றார் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.