பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எப்போதும் மாறுபட்ட கருத்தைக் கொண்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மிசோரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு நாள் பயணமாக நேற்று மிசோரம் வந்தடைந்த ராகுல் மக்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டு, பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். நாட்டில் உள்ள அனைத்து மதங்களும், கலாசாரங்கள், வரலாறுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். நமது நாட்டின் அடித்தளத்தை அமைக்க காங்கிரஸ் உதவியது. அந்த அடித்தளத்தைப் பாதுகாத்துத் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறோம். இந்திய அரசியலமைப்பையும் பாதுகாப்போம்.
வடகிழக்கில் உள்ள பல்வேறு மாநிலங்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் தாக்குதல்களை எதிர்கொள்கின்றன. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எப்போதும் மாறுபட்ட கருத்தைக் கொண்டது. மத நம்பிக்கைகளின் அடித்தளத்தை அச்சுறுத்துகின்றன.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பயனுள்ள பல திட்டங்களைக் கொண்டுவருவதே எங்கள் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.