திண்டிவனத்தில் நேற்று நடைபெற்ற ‘என் மண்; என் மக்கள்’ நடைபயணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத ஒரு பெருமை பாஜகவுக்கு இருக்கிறது. எந்த மாநிலத்திலும் பாஜகவால் எளிதாக ஆட்சியை பிடிக்க முடியாது. அதற்காக தொண்டர்களும், தலைவர்களும் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைக்க வேண்டும். அந்த உழைப்புக்கு மக்கள் கட்டாயம் ஒரு முறை அங்கீகாரம் கொடுப்பார்கள்.
மக்கள் பாஜகவுக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்கினால் அதன் பிறகு நாங்களே நினைத்தாலும் கூட மக்கள் எங்களை ஆட்சியில் இருந்து போக விட மாட்டார்கள்.சமீபத்தில் வெளியான 4 மாநிலத் தேர்தல் முடிவுகளை பார்த்தாலே நான் சொல்வது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இதே போல தமிழகத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும். அதற்கு பிறகு தமிழக மக்கள் பாஜகவை விட மாட்டார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமையும். அப்போது தமிழகத்தில் பல மாற்றங்கள் நடக்கும் என அண்ணாமலை கூறினார்.