கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருக்கு பாஜக முன்னாள் மாநில நிர்வாகி விநாயகமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் ரயில்வே துறையில் சேலம் மண்டலத்தில் 35 பதவிகள் காலியாக இருப்பதாகவும், அதற்கு ஒரு நபருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரே மாதத்தில் வேலை வாங்கித் தருவதாக ரவியிடம், பாஜக நிர்வாகி விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.
மத்திய அரசு வேலை கிடைக்கும் என நம்பிய பலர் விநாயகமூர்த்தியிடம் பணம் கொடுத்துள்ளனர். இதன் மூலம் விநாயகமூர்த்தி மத்திய அரசின் துறைகளில் வேலை வாங்கி தருவதாக 37 பேரிடம் மொத்தமாக 33 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி உள்ளார். ஆனால் அதன் பிறகு விநாயகமூர்த்தி கூறியபடி மத்திய அரசின் துறைகளில் 37 பேருக்கும் எந்த விதமான வேலையும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ரவி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ரவி அளித்த புகாரின் பேரில் பாஜக முன்னாள் நிர்வாகி விநாயகமூர்த்தி, அவரது உதவியாளர் பாலா ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, விநாயகமூர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர்.