பாட்னாவில் பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியில் பாஜக நிர்வாகி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2004 – 09 காலகட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் குறைந்த விலைக்கு நிலங்களை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரயில்வே வேலையில் சேர நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது, சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தேஜஸ்வி யாதவ் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பாஜக எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இன்று பாட்னாவில் பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியில் பாஜக நிர்வாகியான விஜய் குமார் சிங் என்பவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த விஜய் குமார் சிங், பாஜகவின் ஜெகனாபாத் மாவட்ட பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்துள்ளார்.