திமுகவினரின் சொத்துப் பட்டியலைஅண்ணாமலை வெளியிட்ட பிறகு, திமுக -பாஜக இடையே மோதல் உருவாகும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நிலைமை தலைகீழாக மாறி அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக அதிமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அதற்கு காரணம் அண்ணாமலைதான். தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியதுதான் இந்த மோதலுக்கு காரணம்.
அண்ணாமலையை முதிர்ச்சியற்ற அரசியல் தலைவர் என்றும், அவரை பேசி பேசியே பெரிய ஆளாக மாற்றி விடாதீர்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, “காலில் விழுந்து பதவி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி” எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த சூழலில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், எங்களுக்கு பயம் கிடையாது. தேவையில்லாமல் எங்களை தொட்டு நெருப்போடு விளையாடாதீர்கள் என பேட்டியளித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணைஞ்சு போன நெருப்போட விளையாடுறது எங்களுக்கும் பிடிக்காதுண்ணே. என அமர் பிரசாத் ரெட்டி விமர்சித்துள்ளார்.