டெல்லியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு கூட்டம் புதன் கிழமை (டிச.21) நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு ஜனநாயகத்தின் குரலை நெரிக்கிறது. முன் எப்போதும் இல்லாதவகையில் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுவும் முற்றிலும் நியாயமான, சட்ட பூர்வமான கோரிக்கைகளை எழுப்பியதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த 13-ம்தேதி 2 பேர் அத்துமீறி வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் மன்னிக்க முடியாதது மற்றும் நியாயப்படுத்த முடியாதது. இந்த விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தனது கருத்தை தெரிவிக்க பிரதமர் மோடி 4 நாட்கள்எடுத்துக் கொண்டார். அதுவும்நாடாளுமன்றத்துக்கு வெளியில்தான் அவர் தனது கருத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அவர் நாடாளுமன்ற கண்ணியம் மீதும் நாட்டு மக்கள் மீதும் அலட்சியமாக உள்ளார் என்பதை உணர முடிகிறது.
இந்த இக்கட்டான தருணத்தில், நமது சித்தாந்தம் நமக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்கும். நமதுதலைவர்கள் பல்வேறு சவால்களுக்கு நடுவிலும் மிகுந்த தைரியத்துடன் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்ததை மறந்துவிடக்கூடாது. காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படுவதுடன் அங்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் நமது தெளிவான நிலைப்பாடாக உள்ளது. இவ்வாறுசோனியா தெரிவித்தார்.