ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கு பாஜக அரசுதான் நடவடிக்கைகள் எடுத்தது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் நடந்த பஞ்சாயத்து ராஜ் பரிஷத் கூட்டத்தில் நேற்று காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த தீவிரவாதத்தை திரிணமூல் காங்கிரஸ் பயன்படுத்தியது. ஆனாலும், மக்கள் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பேரணி நடத்தியபோது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதான் திரிணமூல் காங்கிரஸின் அரசியல்.
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் முறியடித்தோம். அவர்கள் பரப்பும் எதிர்மறையான விஷயத்தை நாங்கள் முறியடித்தோம். எதிர்க்கட்சிகள் ஓட்டெடுப்பை விரும்பவில்லை. ஏனென்றால் அது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்திவிடும். அவர்கள் அவையை விட்டு ஓடினர். அவர்களுக்கு எந்த விவாதத்திலும் அக்கறை இல்லை.
அவர்கள் அரசியல் செய்ய விரும்பினர். ஏழ்மையை ஒழிப்போம் என காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக கூறிவந்தது. உண்மையில் ஏழ்மையை ஒழிக்கவும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கு பாஜக அரசுதான் நடவடிக்கைகள் எடுத்தது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.