பாஜக எனது கருத்தைத் திரித்து போலி செய்திகளைப் பரப்புகிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
“நான் சனாதன தர்மத்தைத் தான் எதிர்த்தேன். அதை ஒழிக்க வேண்டும் என்றுதான் கூறினேன். அதனை நான் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறேன். எப்போதும் வலியுறுத்துவேன்.
ஆனால் சிலர் சிறுபிள்ளைத்தனமாக நான் இந்துக்கள் அழிப்பை ஊக்குவித்ததாகப் பேசுகின்றனர். திராவிடம் ஒழிய வேண்டும் என்று கூறுபவர்கள் திமுகவினர் கொல்லப்பட வேண்டும் என்று கொல்கிறார்களா? பிரதமர் மோடி காங்கிரஸ் இல்லாத பாரதம் எனக் கூறுகிறாரே. அப்படியென்றால் அதற்கு காங்கிரச்காரர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது அர்த்தமா?
சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்பது சமூகத்தில் எதுவுமே மாறாமல் எல்லாமே அப்படியே இருக்க வேண்டும் அதுவும் நிரந்தரமாக என வலியுறுத்துகிறது. மாறாக திராவிட மாடல் மாற்றத்தையும், சமூக சமத்துவத்தை வளர்க்கிறது. பாஜக எனது கருத்தைத் திரித்து போலி செய்திகளைப் பரப்புகிறது. அது அவர்களின் வழக்கமான செயல்பாடுதான். அவர்கள் என்ன மாதிரியான வழக்குகள் தொடுத்தாலும் நான் அத்தனையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். இண்டியா கூட்டணியைக் கண்டு பாஜகவுக்கு பயம். அதனால் தான் அவர்கள் திசைதிருப்பும் முயற்சியாக இதுபோன்ற செயல்களைச் செய்கின்றனர். ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதே திமுகவின் கொள்கை” என்றார்.