தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : “போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குஜராத்தில்தான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது என்பது நாடறிந்த உண்மை.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி பாஜகதான். தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 16 குற்றவாளிகளை பாஜக கட்சியில் இணைத்துள்ளது.
தமிழகத்தில் அமைதியான ஆட்சி, நிலையான ஆட்சி நடைபெறுகிறது. யாரும் குழப்பத்தை விளைவிக்க முடியாது. தேர்தலுக்காக தமிழக அரசு மீது மத்திய அரசு பழி போட வேண்டாம். தேர்தலுக்காக மதுரை எய்மஸ் மருத்துவமனை பணி துவங்கியுள்ளது. தேர்தலுக்கு பின் பணி நின்றுவிடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.