ஒடிசா மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த சூழலில் ஒடிசாவின் பூரி ஜெகந்நாதரே பிரதமர் மோடியின் பக்தர்தான் என பேசியது பூரி ஜெகந்நாதர் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல சாவி தமிழ்நாட்டில் பதுக்கி வைத்து விட்டனர் என பிரதமர் மோடி பேசினார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விகே பாண்டியன் ஆட்சி செய்ய நினைக்கலாமா? என அமித்ஷா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பூரி ஜெகந்நாதரை இழிவுபடுத்திய ஒரே கட்சி பாஜகதான். பிரதமர் மோடியின் பக்தர்தான் பூரி ஜெகந்நாதர் என பேசியிருப்பது கடவுளை இழிவுபடுத்துவதாகும். அதேபோல ஒவ்வொரு ஒடிசா மக்களையும் பாஜக அவமானப்படுத்தி வருகிறது என விமர்சனம் செய்துள்ளார்.