‘என் மண் , என் மக்கள் ‘ என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 28 ஆம் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நடை பயணத்தின் போது மக்களிடம் இருந்து புகார்களை பெறுவதற்காக புகார் பெட்டியின் அறிமுக விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. அப்போது விடியல…முடியல எனும் வாசகத்துடன் கூடிய ‘ மக்கள் புகார் பெட்டி ‘ யை அறிமுகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகளான பொன்.ராதாகிருஷ்ணன் , எச்.ராஜா , நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், என் மண் என் மக்கள் ‘ நடைபயணம் வரும் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் ஊழலற்ற அரசாங்கம் ஆட்சிக்கு வர வேண்டும். பாஜக கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்த நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணாமலையில் நடைபயணம் நிறைவடையும்போது தமிழகத்தில் மாபெரும் அரசியல் திருப்புமுனை ஏற்படும் , 2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றியை கைப்பற்றும் வகையில் திருப்புமுனை ஏற்படும். ராகுல் காந்தியின் நடை பயணத்தை விட பல மடங்கு பலம் பொருந்தியாதாக அண்ணாமலையின் நடைபயணம் அமையும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.