பாஜகவினர் பழங்குடியினரிடம் ஆங்கிலம் பயிலாதீர்கள் எனக் கூறுகிறது: ராகுல் காந்தி!

பாஜகவினர் பழங்குடியினரிடம் ஆங்கிலம் பயிலாதீர்கள் எனக் கூறுகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் புதன்கிழமை ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:

பாஜகவினர் தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்பிவரும் அதேவேளையில் பழங்குடியினரிடம் ஆங்கிலம் பயிலாதீர்கள் எனக் கூறிவருகிறது. பழங்குடியினரை ஆதிவாசிகள் என அழைப்பதற்குப் பதிலாக வனவாசிகள் என பாஜக அழைக்கிறது.

இரண்டுக்கும் இடையே அதிக வித்தியாசம் உண்டு. அண்மையில் மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர் பழங்குடியினர் ஒருவர் மீது சிறுநீர் கழிக்கும் விடியோ காட்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். அச்சம்பவம் பழங்குடியினரைப் பற்றிய பாஜகவின் மனநிலையைக் காட்டுகிறது.

ஆதிவாசிகள் எனும்போது நிலம், நீர், காடு அனைத்துக்கும் உரிமையுடையவர்கள் என்ற அர்த்தம் உண்டு. ஆனால் வனவாசிகள் என்பதற்கு வனத்தில் வாழ்பவர்கள் என்று மட்டுமே பொருள் கொள்ளப்படும். பாஜக உங்கள் உரிமைகளைப் பறிக்கிறது. நாங்கள் உங்களுக்கான உரிமைகளைத் தருகிறோம். நாங்கள் உங்களை ஆரத் தழுவுகிறோம். ஆனால், பாஜக உங்கள் மீது சிறுநீர் கழிக்கிறது.

வனத்தால் சூழப்பட்ட இந்தத் தேசத்தில் தற்போது வனப்பகுதி குறைந்து வருகிறது. அடுத்த 15-20 ஆண்டுகளில் வனங்கள் காணாமல் போகும். அதன்பிறகு வனவாசிகள் எங்கே போவார்கள்; அவர்கள் தெருக்களில் பிச்சையா எடுப்பார்கள்?

பாஜகவினர் பழங்குடியினரிடம் ஆங்கிலம் பயிலாதீர்கள் எனக் கூறுகிறது. ஆனால், நாங்கள் சத்தீஸ்கரி மொழி பயிலுங்கள் என்று பழங்குடியின இளைஞர்களிடம் வலியுறுத்துகிறோம். பாஜகவினர் அவர்களின் குழந்தைகளை ஆங்கிலவழி பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அவர்கள் பெரிதாக கனவு காண்கிறார்கள். ஆனால் அதுபோல பழங்குடியினர் மட்டும் இருக்கக்கூடாது என நினைக்கின்றனர். உங்கள் குழந்தைகள் ஆங்கிலம் பயில்வதையோ, பெரிதாக கனவு காண்பதையோ பாஜகவினர் விரும்புவதில்லை.

பிரதமர் நரேந்திர மோடி தன்னை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்று அனைத்து இடங்களிலும் பேசி வருகிறார். ஓபிசியினருக்கான நலன் பற்றி பேசுகிறார். ஆனால் நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி வருகிறோம். சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அதுபோல மக்களவைத் தேர்தலில் “இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.

RELATED ARTICLES

Recent News