பாஜகவினர் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய விரும்புகின்றன: ராகுல் காந்தி!

பாஜகவினர் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய விரும்புகின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

மக்களவைத் தேர்தலையொட்டி வடகிழக்கு டெல்லியின் தில்ஷத் கார்டன் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பேசியதாவது: இந்திய அரசிலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாக இருந்து வருகிறது. பாஜகவினர் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய விரும்புகின்றனர். இந்திய அரசியலமைப்பையோ, இந்தியக் கொடியையோ அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.

அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற விரும்புவதை இந்தத் தேர்தலில் இறுதியாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் தான் இந்த தேர்தல்.

நமது அரசியலமைப்பு சட்டம் வெறும் புத்தகம் அல்ல. மகாத்மா காந்தி, அம்பேத்கர் மற்றும் நேருவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால சித்தாந்த பாரம்பரியத்தை அது கொண்டுள்ளது.

அரசியலமப்பு சட்டத்தை பாஜக மாற்ற முயன்றால் எதிர்க்கட்சிகளையும் நாட்டின் கோடிக்கணக்கான மக்களையும் அக்கட்சி எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே அதனை மாற்றும் தைரியம் அக்கட்சிக்கு இருக்காது என்று அவர்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

RELATED ARTICLES

Recent News