ஆரம்பாக் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கோகாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி : ‘இந்தியா’ கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவதில் திரிணமூல் காங்கிரஸ் தனது பங்கை வகிக்கும். தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து நரேந்திர மோடி அரசை எதிர்த்துப் போராடுகிறோம்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் உண்மையான முகம் எனக்குத் தெரியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது, கோகாட் மற்றும் சிஹார் போன்ற இடங்களில் இனப்படுகொலைகளைச் செய்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் மட்டுமே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் பயங்கரவாதத்தைத் துணிச்சலாக எதிர்கொண்டேன்.
பாஜகவால் 400 இடங்களைப் பெற முடியாது. 200 இடங்களைக் கூட தாண்டாமல் அக்கட்சி மண்ணைக் கவ்வும். பாஜகவின் தலைக்கனமிக்க தலைவர்களான மோடியும், அமித் ஷாவும் “மேற்கு வங்கத்திற்கு எதிரானவர்கள்”. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்” என்றார் மம்தா பானர்ஜி.