மகாராஷ்டிராவின் சோலாபூர் பகுதியில் நேற்று பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-
“இந்திய நாட்டில், தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் தலைமைத்துவம் வேண்டாம் என்று காங்கிரஸ் உள்ளது.
இதே வகையில் தான், தலித் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டார்.
பாஜக ஆதரவு கொண்ட கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தான், பாபாசாகேப் அம்பேத்கர் பாரத ரத்னா விருது பெற்றார்” என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு, அதிகப்படியான முன்னுரிமை அளிப்பதே, பாஜகவின் விடாமுயற்சியாக உள்ளது.
2014-ல், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, பெரும்பான்மையான இடங்களை கொடுத்தீர்கள்.
நாங்கள், நாட்டிற்கு, ராம் நாத் கோவிந்த், திரௌபதி முர்மு ஆகிய இரண்டு தலித் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆக்கினோம்” என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“ காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, 3 முக்கிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டுள்ளது. வேலை, செல்வம் மற்றும் மக்கள் நலன். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஒப்பிடும்போது, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றுமே இல்லை.
அதனால் தான், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மற்ற பாஜக தலைவர்கள், அதனைப் பற்றி பேசாமல் இருக்கிறார்கள். பாஜகவின் தேர்தல் அறிக்கை, தடையமே இல்லாமல் அழிந்துவிட்டது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மக்களின் மனதில், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது மற்றும் மக்கள் விவாதிக்கும் மையப்புள்ளியாகவே, அது மாறியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், “மகாராஷ்டிராவின் சோலாபூர் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, எஸ்.சி , எஸ்.டி மற்றும் ஓ.பி.சி-க்கு தான், நாட்டின் வளங்களில் முதல் உரிமை உள்ளது என்று கூறியிருந்தார்.
இதே விஷயத்தை தான், தேசிய வளர்ச்சி கவுன்சிலில், கடந்த 2006-ஆம் ஆண்டு அன்று, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பேசியிருந்தார்.
இதோடு இந்த லிஸ்டில், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளை, அவர் சேர்த்து பேசியிருந்தார். ஏன் பிரதமர் மோடி, சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மறந்துவிட்டார்?
ஏழை சிறுபான்மையினர், ஏழை பெண்கள், ஏழை குழந்தைகள் என்று யாரும் இல்லையா?” என்று மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை விமர்சித்திருந்தார்.
இறுதியில், “ ஏழைகளை உயர்த்துதல், அவர்களது வருமானத்தை அதிகரித்தல், ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல் என்ற கொள்கைகளை, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கொண்டுள்ளது” என்று கூறி முடித்துக் கொண்டார்.