“விசாரணை நடத்தினால் பெரிய விஷயங்கள் வெளியே வரும்” – வீரேந்திர சச்தேவா

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா எம்.பியாக இருப்பவர் சுவாதி மலிவால். இவர், கடந்த 13-ஆம் தேதி அன்று, அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அந்த அழைப்பில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பீபவ் குமார் தன்னை தாக்கியதாக கூறியதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது.

இவர் அழைப்பு விடுக்கும்போது, அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இருந்ததாகவும், செல்போன் சிக்னலின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இவ்வாறு பரபரப்பு தகவல்கள் பரவி வரும் நிலையில், டெல்லி பாஜகவினர், அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டின் முன்பு, பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து டெல்லி பாஜகவின் தலைவர் வீரேந்திர சச்தேவா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “டெல்லியை சேர்ந்த சகோதரிகள், தங்களது இன்னொரு சகோதரியின் கன்னியத்திற்காக போராட இங்கு வந்துள்ளார்கள்.

பெண்களுக்கான டெல்லி கமிஷனின் முன்னாள் தலைவராக இருந்தவரும், பெண்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக பேசியவருமான சுவாதி மலிவால், தற்போது பாதுகாப்பாக இல்லை.

முதலமைச்சரின் அலுவலகத்திலேயே அவர் பாதுகாப்பாக இல்லை. அப்படியானால், டெல்லியின் நிலைமை குறித்து நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் வீட்டிற்குள் நடந்த விஷயத்தின் பின்னால், மிகப்பெரிய சதி இருக்கிறது. காவல்துறையினர் விசாரணையை நடத்தினால், மிகப்பெரிய விஷயங்கள் வெளியே வரும்” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News