பழங்குடியினா் காடுகளைச் சோ்ந்தவா்கள்; அவா்கள் காடுகளைவிட்டு வெளியே வரக் கூடாது என்பதே பாஜகவின் சிந்தனை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
கேரளத்திலுள்ள தனது வயநாடு மக்களவைத் தொகுதிக்கு 2 நாள் பயணமாக சனிக்கிழமை வருகை தந்த ராகுல் காந்தி, வயநாடு மாவட்டத்தின் நல்லூா்நாடு பகுதியில் உள்ள அம்பேத்கா் நினைவு மாவட்ட புற்றுநோய் மையத்தில் உயரழுத்த மின்வசதியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
அவா் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக, பழங்குடியினரை ஆதிவாசி என்பதற்கு பதிலாக வனவாசி என்று அழைக்கிறது. இதன் பின்னணியில் ஒரு வக்கிரமான காரணம் உள்ளது.
இந்த நிலத்தின் உண்மையான உரிமையாளா்கள் என்ற அந்தஸ்தை பழங்குடியினருக்கு மறுப்பதுடன், அவா்களை காடுகளுக்குள் கட்டுப்படுத்தி வைப்பதே அந்த காரணமாகும்.
பழங்குடியினா் காடுகளைச் சோ்ந்தவா்கள்; அவா்கள் காடுகளைவிட்டு வெளியே வரக் கூடாது என்பதே பாஜகவின் சிந்தனை. காங்கிரஸை பொருத்தவரை, இந்த சிந்தனை ஏற்றுக் கொள்ள முடியாதது.
ஏனெனில், வனவாசி என்ற சொல்லாடல், பழங்குடியின சமூகங்களின் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் சிதைப்பதோடு, நாட்டுடனான அவா்களின் உறவின் மீதான தாக்குதலாக உள்ளது.
காங்கிரஸைப் பொருத்தவரை, பழங்குடியினா் எப்போதுமே ஆதிவாசிகள்தான்; இந்த நிலத்தின் உண்மையான உரிமையாளா்கள்.
நிலம் மற்றும் காடுகள் மீதான உரிமைகள் அவா்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவா்கள் விரும்பியதைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
கல்வி, வேலை, தொழில் என அனைத்து வாய்ப்புகளும் பழங்குடியினருக்கு கிடைக்க வேண்டும். அவா்கள் கட்டுப்படுத்தப்படவோ, தனியாக பிரிக்கப்படவோ கூடாது.
நவீன சமூகமானது, காடுகளை எரித்து அழித்ததோடு, மாசுபாட்டையும் உருவாக்கியது. அதன்பிறகுதான், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசப்படுகிறது. ஆனால், பழங்குடியின சமூகத்தினா் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசி வருகின்றனா். அவா்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் என்றார் ராகுல்.