ஆற்றில் மிதந்து வந்த ரூ.500 நோட்டுக்கட்டுகள்.. ஆச்சரியத்தில் துள்ளிக் குதித்த நபர்.. ஆனால் கடைசியில் இப்படி ஆயிடிச்சே..?

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது என்று பழமொழி ஒன்றை சொல்வார்கள். அதாவது, கிடைக்கும் தூரத்தில் உள்ள ஒரு பொருள், கடைசி நேரத்தில் கிடைக்காமல் போவதை இப்படி சொல்வார்கள். இப்படியான ஒரு சம்பவம் ஒன்று, கேரள மாநிலத்தில் உள்ள ஆற்றிங்கல் பகுதியில் நடைபெற்றுள்ளது.

கேரளா மாநிலம் ஆற்றிங்கல் என்ற பகுதியில் உள்ள ஆற்றில், ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பெரிய தெர்மாகோல் பெட்டிகள், ஆற்றில் மிதந்து வந்துள்ளது. அதை திறந்து பார்த்த அந்த நபருக்கு பெரும் இன்ப அதிர்ச்சி காத்துக்கிடந்துள்ளது.

அதாவது, அதில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கிடந்துள்ளது. இதைப் பார்த்த அந்த நபருக்கு, கொஞ்ச நேரத்தில், தலையும் புரியவில்லை.. காலும் புரியவில்லை.. பணத்தை பார்த்து திகைத்து நின்றுள்ளார். ஆனால், அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம் கூட நீடிக்க முடியாமல் போய்விட்டது.

ஆம், அது உண்மையான 500 ரூபாய் நோட்டுகள் அல்ல. சினிமாவில் பயன்படுத்தும் டம்மி நோட்டுகள். அந்த ரூபாய் நோட்டின் ஒரு பகுதியில் ‘Only For Shooting Purpose’ என எழுதியிருந்ததை கண்டு மீண்டும் அதிர்ந்தார்.

500 ரூபாய் நோட்டுகள் நீரில் அடித்துவந்து தன்னிடம் சேர்ந்தது என்பது எப்படி அவர் எதிர்பார்க்காத ஒன்றோ அதேபோல் அவை போலி என்பதும் அவர் எதிர்பார்க்காத ஒன்றாகவே ஏமாற்றத்தில் முடிந்தது. அந்த டம்மி நோட்டுக்கள் எப்படி நீரில் மிதந்து வந்தது என்பது குறித்து, ஆற்றிங்கல் பகுதி காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.