வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கூலி வேலை செய்து வருபவர் சுப்பிரமணி. இவருக்கு அனிதா(16) என்ற மகள் உள்ளார்.
சுப்பிரமணியின் தங்கை மகன் சிவா(19) கடந்த 19ஆம் தேதி அன்று விபத்தில் உயிரிழந்துவிட்டார். சிவாவும் அனிதாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிவா இறந்த சோகத்தில் இருந்த அனிதா தனது தோழிகளிடம் சிவா இறந்துவிட்டார் நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்க வேண்டும் என மன வருத்தத்தோடு பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி மதியம் வீட்டில் இருந்த அனிதா திடீரென காணாமல் போயுள்ளார். தொடர்ந்து நான்கு நாட்களாக தேடியும் அனிதா கிடைக்காததால், நேற்று குடியாத்தம் காவல் நிலையத்தில் தனது மகள் அனிதா காணவில்லை என சுப்பிரமணி புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் பெண் சடலம் ஒன்று இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் அது சுப்பிரமணியின் மகள் அனிதா என்பது தெரிய வந்தது.
பின்னர் அனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலன் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் காதலி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.