உயிரிழந்த நபர்களின் அரசாங்க ஆவணங்களை வைத்து, கடன் பெற்று மோசடி செய்யும் நபர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், உயிரிழந்த பிணத்தையே, வங்கியின் உள்ளே அழைத்து சென்று, லோன் வாங்க முயற்சித்த சம்பவம் ஒன்று நடந்து, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதாவது, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனேரோ பகுதியில் உள்ள வங்கி ஒன்றிற்கு, வியேரா என்ற பெண், தனது 68 வயது உறவினருடன், வங்கி ஒன்றிற்கு சென்றுள்ளார். அந்த உறவினரை, வீல் சேர் ஒன்றில், வங்கியின் அவர் அழைத்து வந்துள்ளார்.
அங்கு, தனது உறவினரின் பெயரில், லோன் வாங்க முயற்சித்த வியேரா, உறவினரின் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் வழங்கியுள்ளார். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே வியேராவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர்கள், அந்நாட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையின் இறுதியில், பெண்ணுடன் வந்த முதியவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்றும், லோன் வாங்கி, மோசடி செய்வதற்காக, அவரது சடலத்தை அந்த பெண் வங்கியின் உள்ளே அழைத்து வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், அந்த முதியவர் எப்போது உயிரிழந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இதுகுறித்து பேசியுள்ள அப்பெண்ணின் வழக்கறிஞர், அந்த குற்றச்சாட்டுகள் முழுவதையும் மறுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோவும், இணையத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.