செல்போனில் நீண்ட நேரம் பேசிய அக்காவை கொலை செய்த தம்பி!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள செட்டிகுறிச்சியை சேர்ந்தவர் மாரியப்பன் கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மூத்த மகள் சுபா வேணிக்கு (21) அய்யனார்குலத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு சுருதிமாதவ் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது இந்த சூழலில் சுபாவேணிக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சுபாவேணி கணவரை பிரிந்து கடந்த 6 மாதமாக தாய் வீடான செட்டிகுறிச்சியில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

கணவரை பிரிந்து அக்காள் தங்கள் வீட்டில் வசித்து வருவது அவரது தம்பி மகேஷ்வரனுக்கு பிடிக்க வில்லை என கூறப்படுகிறது. மேலும் அக்கா அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசுவதையும் அவர் கண்டித்துள்ளார். இதனால் அக்காள் தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகேஷ்வரன் தனது தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது. சுபாவேணி தன் குழந்தை மற்றும் தாய் லெட்சுமியுடன் அங்கு வந்துள்ளார். லெட்சுமி தனது பேரக்குழந்தையுடன் தோட்டத்தின் வேறு பகுதியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது சுபாவேணி தோட்டத்தில் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும் ஆத்திரத்தில் மகேஷ்வரன் அக்காளின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுபாவேணி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையுண்ட பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவான மகேஷ்வரனை தேடி வருகின்றனர்.

ஆலங்குளத்தில் தம்பியை அக்காவை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News