Connect with us

Raj News Tamil

தேர்தல் பத்திர முறை ரத்து! – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அரசியல்

தேர்தல் பத்திர முறை ரத்து! – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாக அல்லது காசோலையாக நன்கொடையாக கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதி பாத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-ல் அமல்படுத்தியது.

இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரையிலான தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.

ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.

அரசியலில் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் மூலம், அரசியல் கட்சிகள் பெருமளவிலான நிதியை பெற்றன. குறிப்பாக, பாஜக அதிகளவிலான நன்கொடையை பெற்றது.

ஆனால் இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாக, பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. ஒருமித்த தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது;

அரசை கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறி உள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. அதாவது, தகவல் அறியும் உரிமை சட்டம், அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை இந்த தேர்தல் பத்திர முறை மீறும் வகையில் உள்ளது.

தேர்தல் பத்திர விவரங்களை வழங்காமல் இருப்பதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்பதால் அதனை ரத்து செய்கிறோம். தேர்தல் பத்திரம் விநியோகிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

More in அரசியல்

To Top