அதானி மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு!

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் அதானி குழும நிறுவனத் தலைவர் கவுதம் அதானி. இவர் பணக்கார பட்டியலில் இந்தியா அளவில் 2-வது இடத்திலும், உலகளவில் 22-வது இடத்தில் உள்ளார்.

இவர் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர முன்வந்ததாக அமெரிக்கா மிகப் பெரிய குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. இது குறித்து நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது.

‘2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில், சூரிய ஓளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர்கள் லஞ்சம் கொடுக்க அதானி முனைந்தார்.

லஞ்சம் தொடர்பான தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை திரட்டினார். அதானியின் செயல் சட்டப்படி தவறானது’ என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதானியின் உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீதும் அமெரிக்கா புகார் அளித்துள்ளது. இதே புகாரில் அமெரிக்கா பங்கு பரிவர்த்தனை ஆணையமும் அதானி மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து அதானியோ, இந்திய தூதரகமோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

இதன் எதிரொலியாக இந்தியாவில் வியாழக்கிழமை காலை பங்கு வர்த்தகம் தொடங்கியதும் அதானி குழும பங்குகள் சுமார் 20 சதவீதம் சரிவை எதிர்கொண்டது.

RELATED ARTICLES

Recent News