மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர் காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் புனே நகரில் சசூன்ஸ் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டு திறக்கப்பட்டது. இதில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கலந்துகொண்டார்.
இந்த விழா மேடையில் பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் விரக்தியடைந்து மேடையிலிருந்து கீழே இறங்கியபோது பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே, தடுமாறினார்.
அப்போது கோபமடைந்த அவர் அங்கு பாதுகாப்பு பணிக்காக படிக்கட்டில் நின்றிருந்த காவலரை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்லே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே ஏற்கெனவே பெண் ஊழியரை துன்புறுத்தி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.