அறிஞர் அண்ணாவின் காலத்தில் இருந்தே, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருந்து வருகிறது. இதனை மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் நடந்தும், இன்றுவரை, இருமொழிக் கொள்கை மட்டுமே உள்ளது. இவ்வாறு இருக்க, சமீபத்தில் பேசிய மத்திய கல்வி அமைச்சர், “புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இது, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து, திமுக சார்பில், நாளை போராட்டம் நடத்த இருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில், திமுகவின் கூட்டணி கட்சியினரும் பங்கேற்க உள்ளனர். நாளை மாலை 4 மணி அளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடக்க உள்ளது.
இதேபோல், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில், ஓ.பன்னீர் செல்வம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் இந்த செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும், மும்மொழிக் கொள்கையை தமிழகம் பின்பற்ற வேண்டும் என்ற முடிவை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தமிழகத்திற்கான நிதியை, மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தங்களது கட்சி மாநாட்டில் பேசும்போது, “மும்மொழிக் கொள்கையை அதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என்று, தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், இந்த சம்பவத்திற்கு விஜய் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், “மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே” என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, அமைச்சர் கே.என்.நேரு, கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் என்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினர், தங்களது கண்டனங்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றனர்.