எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை!

நூறு சதவீதம் எத்தனாலில் இயங்கும் முதல் கார் இந்தியாவில் அறிமுகமாகி உல்ளது. இதுபோன்ற கார்களை அதிகளவில் உற்பத்தி செய்ய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் இறக்குமதியால் அதிகளவில் அந்நிய செலவாணி செலவிடப்படுவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாற்று எரிபொருளாக எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், நூறு சதவீதம் எத்தனாலில் இயங்கும் இந்தியாவின் முதல் கார் டெல்லியில் அறிமுகமாகியுள்ளது. மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி காரை சிறிதுதூரம் ஓட்டிச் சென்று, அதனை அறிமுகம் செய்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எத்தனால் பயன்பாட்டில் இயங்கும் காரை அறிமுகம் செய்ததன் மூலமாக நீண்டநாள் கனவு நனவாகி இருப்பதாக குறிப்பிட்டார்.

காற்று மாசு ஏற்படுவதை தடுக்க, மெத்தனால், மின்சாரம் உள்ளிட்ட மாற்று எரிசக்திகளால் இயங்கும் கார்களை அதிகளவில் தயாரிக்க உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும் என்றும், நிதின்கட்காரி வலியுறுத்தியுள்ளார்.