நாட்டின் கடன்கள் மீது மத்திய அரசு மிகுந்த கவனமுடன் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கெளடில்ய பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் பேசியதாவது:
நாட்டின் குறு பொருளாதார நிலைத்தன்மை தொடா்பான விவகாரங்கள், நிதி மேலாண்மை தொடா்பான விவகாரங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் மிகுந்த கவனமுடன் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அடுத்த தலைமுறையினா் மீது என்ன மாதிரியான சுமையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதிலும் மத்திய அரசு கவனமுடன் உள்ளது.
ஊதாரித்தனமாகச் செயல்படுவதும், அதனால் ஏற்படும் கடன் சுமையை வருங்கால தலைமுறையினா் மீது சுமத்துவதும் எளிதானது.
ஆனால், நாட்டின் கடன்கள் மீது மத்திய அரசு மிகுந்த கவனமுடன் உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் கடன் சுமை மிக அதிகமல்ல. பிற வளா்ந்து வரும் நாடுகளின் கடன் சுமை தொடா்பான புள்ளி விவரங்கள், அதனை அவா்கள் எவ்வாறு சமாளிக்கின்றனா் என்பதையும் மத்திய அரசு கவனித்து வருகிறது.
மேலும், வருங்கால தலைமுறையினா் மீது நாட்டின் கடன் சுமையை திணித்துவிடக் கூடாது என்ற மிகுந்த பொறுப்புணா்வுடன், கடன் சுமை மேலாண்மை முயற்சிகளை வெற்றிகரமாக இந்தியா மேற்கொண்டு வருகிறது.
கரோனா பாதிப்பு காலங்களில், மக்களுக்கு நேரடியாக பணத்தை கொடுப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு ரூபாய்க்கும் சிறந்த வருமானம் கிடைக்கும் வகையில் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் வரிப் பணத்தை மத்திய அரசு செலவிட்டது. இத்தகைய மூலதனச் செலவினங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், அதனை எண்ம (டிஜிட்டல்) அணுகுமுறையில் செலவழிக்கவும் அரசு முடிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம், ஒவ்வொரு பணமும் எங்கு செல்கிறது என்பதை மக்கள் பார்க்க முடியும். குடிமக்களுக்கு அதிகாரமளிக்க எண்ம மயமாக்கலைக் காட்டிலும் சக்திவாய்ந்த நடைமுறை வேறெதுவும் இல்லை.
இதற்கு மக்கள் நிதித் திட்ட (ஜன்-தன்) வங்கிக் கணக்குகளை உதாரணமாக கூறலாம். இந்தத் திட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, இத்தகைய ‘பூஜ்ஜியம்’ இருப்பு (ஜீரோ பேலன்ஸ்) வங்கிக் கணக்குகளால் பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இன்றைக்கு மக்கள் நிதி திட்ட வங்கிக் கணக்குகளில் ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் கோடி ரொக்கம் இருப்பு உள்ளது என்றார்.