இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மத்திய அரசு முயற்சி: பிரதமர் மோடி!

டெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் தேசிய கைத்தறி நாள் நேற்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டது. கதர் மற்றும் கைத்தறி பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கண்காட்சியை பார்வையிட்டு நெசவாளர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் மாதம் ஆகஸ்ட். குறிப்பாக சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக இதே நாளில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அத்துடன் சுயசார்பு பொருளாதார நாடாக மாற வேண்டும் என்ற உத்வேகத்தையும் அது வழங்கியது.

இந்த இயக்கம் நாடு முழுவதும் இருந்த நெசவாளர்களையும் மக்களையும் இணைத்தது. இதனால்தான், அதே நாளில் தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி துறையை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது நாட்டில் சுதேசி தொடர்பாக புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் கதர் ஆடைகள் விற்பனை 5 மடங்கு உயர்ந்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு கதர் தொழில் துறையின் உற்பத்தி சுமார் ரூ.30 ஆயிரம் கோடியாக இருந்தது. இது இப்போது ரூ.1.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நம் நாட்டின் கதர், கைத்தறி ஆடைகளை உலக சாம்பியன் ஆக்க வேண்டியது நம்முடைய கடமை ஆகும்.

உள்நாட்டு தயாரிப்பை மத்திய அரசு ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல் அவற்றை சர்வதேச சந்தையில் விற்கவும் வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருக்கின்றன. இதில் உள்நாட்டு பொருட்களை வாங்க நாட்டு மக்கள் முன்வர வேண்டும்.

உலகின் முதல் 3 பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற ஜவுளி துறையினர் தங்கள் வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், சிலர் இதற்குமுட்டுக்கட்டை போடுகின்றனர். எனவே, ஊழல், சமாதானப்படுத்தும் அரசியல், வாரிசு அரசியல் உள்ளிட்ட தீய சக்திகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொதுமக்கள் கோரி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News