தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், நாமக்கல், திருப்பூா், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 31 டிகிரி செல்ஸியஸ், குறைந்தபதக்கம் 24-25 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும்.
தொடர்ந்து அடுத்த இரு தினங்களுக்கும்(நவ. 7,8) பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
திங்கள்கிழமை (நவ.6) லட்சத் தீவு பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் இடையிடையே 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.