சென்னையில் உள்ள சென்ட்ரல் இரயில் நிலையம் இந்தியாவின் முதல் அமைதியான இரயில் நிலையமாக இரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய இரயில் நிலையங்களில் ஒன்றான சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பல இரயில்கள் இயக்கப்படுகின்றன.
150 ஆண்டுகளாக இயங்கி வரும் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இரயில் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம், நடைமேடை எண் ஆகியவற்றை ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தார்கள். தற்போது ஒலி மாசை குறைப்பதற்காக இரயில்வேத் துறை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்வதை நிறுத்தியுள்ளது.
அதற்கு பதிலாக டிஜிட்டல் பலகையில் இரயில் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம், நடைமேடை எண் ஆகியவை காட்சிப்படுத்தியுள்ளனர். மக்கள் அந்த டிஜிட்டல் பலகையில் உள்ள விவரங்களை பார்த்து தான் இரயிலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறுதி நேரத்தில் இரயில் ஏற வருபவர்கள், படிக்க தெரியாதவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த முறை பாதிப்பு ஏற்படுத்துகிறது.
இந்த புதிய முறையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதால் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு அறிவிக்கும் முறையை மீண்டும் தொடர வேண்டும் என இரயில் பயணிகள் கருத்து தெரிவித்தனர்.