சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கோதண்டராமன். 42 வயதாகும் இவருக்கு, 10 வயதில் பிரதிஷா என்ற மகள் உள்ளார். பிரதிஷாவுக்கு 3 வயது இருக்கும்பொது, சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட்டதால், எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் மீண்டும் வீடு திரும்பினார். இதற்கிடையே, 2021-ஆம் ஆண்டு அன்று மீண்டும் சிறுமிக்கு பிரச்சனை ஏற்பட்டபோது, அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, அந்த ரத்தம் உறைதல் ஏற்பட்டு, வலது காலும், இடது கையும் செயலிழந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து காவல்துறையிலும், சுகாதாரத்துறையிலும் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் விரக்தி அடைந்த கோதண்டராமன், தலைமை செயலகம் முன்பு, தர்ணா போராட்டத்தை ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அவரிடம் சமரசம் பேசியதையடுத்து, தனது போராட்டத்தை அவர் கைவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோதண்டராமன், “மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை தான் கடந்த 5 ஆண்டுகளாக என் மகளுக்கு வழங்கி வந்தேன். ஆனால், தற்போது அவளது கை, கால்கள் செயலிழந்துவிட்டன. தவறான சிகிச்சையே இதற்கு காரணம். எனவே, அந்த மருத்துவர்கள் மீதும், மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
காவல்துறையில் தலைமை காவலராக உள்ள இவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்து வருகிறது. கோதண்டராமனின் இந்த புகார் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? இது உண்மையிலேயே விடியல் அரசா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளும் எழுந்து வருகின்றன.