Connect with us

Raj News Tamil

மோடியின் கையில் சென்னையை ஒப்படைக்க வேண்டும்: அண்ணாமலை!

தமிழகம்

மோடியின் கையில் சென்னையை ஒப்படைக்க வேண்டும்: அண்ணாமலை!

உலகத்தரம் வாய்ந்த சென்னை மாநகரை உருவாக்க வேண்டும் என்றால் மோடியின் கையில் சென்னையை ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கொளத்தூர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்று சாமானிய மக்கள் நினைக்கிறார்கள். ஒரு சாமானிய மனிதர்நினைத்தால்தான் அரசியல் சுத்தமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பெய்யும் மழையின்போது கொளத்தூர் மக்கள் 8 நாட்கள் தண்ணீருக்கு உள்ளேயே இருக்கிறார்கள். மழை பெய்தால் வாரக்கணக்கில் தண்ணீர் தேங்குகிறது. குண்டும் குழியுமான சாலைகளாக இருக்கிறது. குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சென்னையில் போதுமானதாக இல்லை.

மோடியை போன்ற சாமானிய மனிதர் ஆட்சிக்கு வரும்போது, இந்தியாவும் வளரும், ஓவ்வொரு மாநிலமும் வளரும். 10 ஆண்டு ஆட்சியில் ஒரு குண்டூசியை திருடிவிட்டார் என்ற குற்றச்சாட்டைக் கூட மோடி அரசு மீது வைக்க முடியாது.

இந்தியாவில் பாஜக எம்பிக்கள் உள்ள தலைநகரங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 3 தொகுதிகளில் திமுக குடும்ப ஆட்சி மட்டுமே நடப்பதால், அவர்களுக்கு சாமானிய மனிதனின் வலி தெரிவது இல்லை.

மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கப்போகிறது. திமுக ஆட்சியில் மத்திய அரசு எவ்வளவு நிதி தமிழகத்துக்கு கொடுத்தாலும், அது சாமானிய மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய நிதியாக மாறுவதில்லை. தமிழக மக்கள் திமுக ஆட்சி மீது வெறுப்பில் உள்ளனர். எனவே, பாஜகவின் தொலைநோக்கு பார்வை உடைய எம்.பி.க்கள் தமிழகத்துக்கு வேண்டும்.

மற்ற ஊர்களில் வெளியூர் செல்வதற்கு பேருந்து ஏறுவோம். ஆனால், சென்னைக்காரர்கள் வெளியூர் செல்வதற்கு, வெளியூருக்கு போய்தான் பேருந்து ஏறவேண்டும். சென்னையில் வாழ மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். முழுமையாக சென்னை மாநகரை சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். உலகத்தரம் வாய்ந்த சென்னை மாநகரை உருவாக்க வேண்டும் என்றால் மோடியின் கையில் சென்னையை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top