நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன்,19 என்ற மாணவர், நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். மேலும் இதற்காக தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் அவர் சென்று படித்துள்ளார்.
நடப்பாண்டு நீட் தேர்வில் தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தியடைந்த மாணவன் ஜெகதீஸ்வரன், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரை பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில் நள்ளிரவில் செல்வ சேகர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவனும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.