சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணிப்பதால் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய கைலாஷ் பகுதியில் ‘எல்’ வடிவதிலும் ஓ.எம்.ஆர் இந்திரா நகர் சந்திப்பு, டைடல் பார்க் பகுதியில் ‘யு’ வடிவத்திலும் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் இந்திரா நகர் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘யு’ வடிவ மேம்பால பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டமும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். 450மீ நீளமும் 25 அடி அகலமும் கொண்ட இந்த ‘யு’ வடிவ மேம்பாலத்தில் 40 அடி இடைவெளியில், 20 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சோழிங்கநல்லூரிலிருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் டைடல் பார்க் சந்திப்பில் உள்ள சிக்னலுக்காக காத்திருக்காமல் இந்த ‘யு’ வடிவ மேம்பாலம் வழியாக இந்திரா நகர், அடையாறு மற்றும் திருவான்மியூர் பகுதிகளுக்கு செல்லலாம்.