விருதுநகரில் கள ஆய்வு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று (நவ.9) விருதுநகருக்கு வருகை புரிந்தார்.
விருதுநகருக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து விருதுநகர் அருகே உள்ள கன்னிச்சேரி புதூர் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பட்டாசு ஆலையில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று பட்டாசு தயாரிக்கும் முறையை முதல்வர் பார்வையிட்டு பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தொழிலாளர்களிடம் கலந்துரையாடிய முதல்வர் பட்டாசு தயாரிப்பு முறை மற்றும் பட்டாசு தொழில் உள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பட்டாசு ஆலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களிடம் தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் கிடைகிறதா? என முதல்வர் கேட்டறிந்தார்.
இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளில் கல்விச்செலவை அரசு ஏற்க வேண்டும் எனவும், பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என தொழிலாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டு அறிந்த முதல்வர் தங்களது குறைகளை சரி செய்வதாக உறுதி அளித்தார்.