தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்த, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு 3.2.2023 அன்று அரசாணையை வெளியிட்டது. அதன்படி, மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக ரூ.62 கோடியே 77 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18.3.2023 அன்று கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் 3 அடுக்கு பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், அருங்காட்சியம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் புலப்படுத்தும் புல்வெளிகளுடன் கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்ட இந்த பிரமாண்டமான அரங்கம் 83 ஆயிரத்து 462 சதுரடி பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்திற்கு நேரில் சென்று இன்று திறந்து வைத்தார்.