தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அம்மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. ரயில் சேவைகள், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடைய வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார். இன்று காலை 10.30 மணியளவில் சென்னை திரும்பும் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் 4 மாவட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் மதுரை செல்கிறார். நாளை தூத்துக்குடிக்கு சென்று அங்கு வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார்.
தென்மாவட்டங்களின் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று மத்திய குழு வருகை தருவதால் முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
