மக்களவைத் தேர்தலுக்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நமது நாட்டின் ஒரு சட்டம். தேர்தலுக்கு முன் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இதில் எந்தக் குழப்பமும் இல்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது காங்கிரஸ் அரசின் வாக்குறுதி. நாடு பிளவுபட்டபோது, அந்த நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளானதை அடுத்து, அவர்களை இந்தியா வரவேற்பதாகவும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதி அளித்தது. ஆனால், தற்போது அந்த வாக்குறுதியில் இருந்து அந்தக் கட்சி பின்வாங்குகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது புதிதாக குடியுரிமை வழங்குவதற்கான சட்டம்தானே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல. ஆனால், நமது நாட்டில் உள்ள சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் தூண்டப்படுகிறார்கள். யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான அம்சம் எதுவும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இல்லை. வங்கதேசத்திலும், பாகிஸ்தானிலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான வழிவகைகள் மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உள்ளன” என தெரிவித்தார்.