பொதுமக்களின் உயிர் காக்கப்படுவது முக்கியம்: ஐ.நா. பொதுச் செயலா்!

பொதுமக்களின் உயிர் காக்கப்படுவது முக்கியம் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் நியூயார்க்கில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காஸாவின் ஒட்டுமொத்த பகுதியும் முற்றுகையில் உள்ள நிலையில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை உணவு, குடிநீா், தங்குவதற்கு இடம் இல்லாத பகுதிக்கு நகா்த்துவது மிகவும் ஆபத்தானது. சில சந்தா்ப்பங்களில், இது சாத்தியமற்றாகும்.

தெற்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகள் ஏற்கெனவே நிரம்பிவழிகின்றன. வடக்கில் இருந்து வரும் புதிய நோயாளிகளை அந்த மருத்துவமனைகளால் ஏற்க முடியாது.

காஸாவில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த சில நாள்களில் மருத்துவ கட்டமைப்புகள் மீது 34 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அங்கு சுகாதார அமைப்புமுறை முற்றிலுமாக சீா்குலைந்துள்ளது. ஒட்டுமொத்த பகுதியிலும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

போர்களுக்கும்கூட விதிமுறைகள் உள்ளன. எனவே, காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உணவு, குடிநீா், எரிபொருள் போன்ற உதவிகள் ஐ.நா. தரப்பில் வழங்கப்பட அனுமதிக்க வேண்டும்.

சா்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதோடு, அவை உறுதி செய்யப்பட வேண்டும். பொதுமக்களின் உயிர் காக்கப்படுவது முக்கியம். அவா்களை கேடயமாக பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். காஸாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளை உறுதி செய்வது, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கடமை என்றார் குட்டெரெஸ்.

RELATED ARTICLES

Recent News