ஓசூர் அருகே இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவருக்கும், மருந்தாளனருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர், பிராமணர் தெரு பகுதியில் செயல்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவமனை கிளையில், டாக்டர் சந்தோஷ் குமார் என்பவர் மருத்துவராகவும், ஜெயபிரபு என்பவர் மருந்தாளுனராகவும் பணியாற்றி வருகின்றனர்.
ஜெயபிரபு தனது மின்சார வாகனத்திற்கு பேட்டரி சார்ஜ் செய்வதற்காக மருத்துவமனையில் உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி உள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் சந்தோஷ் குமார் மருத்துவமனை மின்சார செலவாக அரசு சார்பில் 6,500 மட்டுமே ஒதுக்கப்படுவதால் அதற்கு மேல் வரும் மின் கட்டணத்திற்கு தானே பொறுப்பு என்பதால் மின் இணைப்பை பயன்படுத்தி வாகனத்திற்கு சார்ஜ் செய்யக்கூடாது என கூறியுள்ளதாக தெரிகிறது.
இதனால் இவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் மருத்துவருக்கு கை முறிவு ஏற்பட்டு உள்ள நிலையில் ஜெய பிரபுவுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து இருவரும் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவருக்கும் மருந்தாளனருக்கும் இடையே நடைபெற்ற சண்டை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.