இந்தி தினிப்புக்கு எதிராக போராடி உயிரிழந்த தியாகிகளின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 25-ஆம் தேதி அன்று, மொழிப்போர் தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சியினர், அவர்களின் திருவுருவ படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஆதிக்க இந்திக்குத் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உணர்த்திய மொழிப்போர்க்களத்தின் முதல் தியாகச் சுடர்கள் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை மூலக்கொத்தளத்தில் திறந்து வைத்தேன்.
அதுமட்டுமல்ல, சகோதரர் திருமாவளவன் அவர்களின் கோரிக்கையினை ஏற்று, எழும்பூரில் உள்ள தாளமுத்து – நடராசன் மாளிகையில் அவர்தம் திருவுருவச் சிலைகளையும் நிறுவிடுவோம்!
தமிழைக் காக்கத் தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது! மொழிப்போர்த் தியாகிகளுக்கு எம் வீரவணக்கம்! #தமிழ்_வெல்லும்!” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம்.
தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்.
உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
தமிழ் வாழ்க!” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பல்வேறு அரசியல் கட்சியினர், இவர்களது தியாகத்தை போற்றும் வகையில், மரியாதை செலுத்தி வருகின்றனர்.