நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின்போது, அரசியலுக்காக தான், தேசியக் கல்விக்கொள்கை நிராகரிக்கப்படுகிறது என்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
மேலும், தங்களை அநாகரீகமானவர்கள் என்று அவர் கூறியதாகவும், திமுக எம்.பி-க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால், நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, நாவடக்கம் வேண்டும்” என்றும், “நிதியை தராமல் ஏமாற்றும் நீங்கள், தமிழ்நாட்டு எம்.பி-க்களை அநாகரீகமானவர்கள் என்று கூறுவீர்களா?” என்றும் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து, “தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உரிய நிதியை, உங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா? முடியாதா என்று மட்டும் பதில் சொல்லுங்கள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், குறிப்பிட்டுள்ளார்.