தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் இருக்கும் என்றும், மும்மொழிக் கொள்கை எந்த காலத்திலும் நடைமுறைக்கு வராது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
ஆனால், இதற்கு பதிலடி தரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்று கூறும், திமுகவினர், அவர்கள் நடத்தும் பள்ளியில் மட்டும், இந்தியை கற்றுத் தருகிறார்களே என்று, விமர்சித்து வந்தார்.
இதற்கு, பல்வேறு தரப்பினர் தங்களது விளக்கங்களை கொடுத்து வந்தனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்றுத்தரப்படுகிறது என்று விமர்சனம் செய்கிறார்கள். தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால் அதற்கு காரணம் மத்தி அரசின் கல்விக்கொள்கைதானே தவிர, தி.மு.கவினரோ வேறு எந்தக் கட்சியினரோ தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள்.
தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் எதிலும் மும்மொழித் திட்டம் கிடையாது. இந்தி மொழி என்பது கட்டாயமுமில்லை. அந்த மொழியில் தேர்வு நடத்தப்படுவதுமில்லை. தமிழ்நாட்டு ஏழை மாணவர்கள் மீது இவர்களுக்கு மட்டும்தான் அக்கறை உள்ளது போல வேடம் போடுகிறார்கள்.
பா.ஜ.க. ஆட்சி செய்கின்ற இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளைவிட, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லாத-இருமொழிக் கொள்கை வழியிலான அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரம் உயர்ந்தே இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன” என்று கூறியுள்ளார். இதன்மூலம், பாஜகவினரின் விமர்சனத்திற்கு, தெளிவான விளக்கத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார்.