புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி வழங்க முடியாது என்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் கூறியிருந்தார். இது, தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், பாஜகவை தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சியினரும், தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில், திமுகவின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “இந்தி படிக்காதே என்று யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. இந்தியை எங்கள் மீது திணிக்காதே என்று அறப்போரை தான் தொடர்ந்து நடத்துகிறோம். இந்த போரில் எப்போதும் சமரசமில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், எந்த மொழிக்கும், நாம் எதிரி இல்லை. ஆனால், ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை, அதற்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, “தமிழை காக்கும் அறப்போரில், உங்களில் ஒருவனாக என்றும் துணை நிற்பேன்” எனவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.