இந்தியாவில் அடுத்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதனால், தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் நாடாளுமன்ற தொகுதிகள் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்களை அழைத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் எங்கள் சமீபத்திய விவாதங்களிலிருந்து உருவான தொகுதி மறுசீரமைப்பு குறித்த குறிப்பாணையை கொடுக்க விரும்புகிறேன்” என்றும், “எங்கள் விவாதங்களிலிருந்து எழும் குரல்கள், அரசியல் எல்லைகளைக் கடந்து, நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நியாயமான பிரதிநிதித்துவத்தை நாடும் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களின் கவலைகளை உள்ளடக்கியது” என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பாக குறிப்பாணையை முறையாக சமர்ப்பிக்க உங்களை சந்திக்க விரும்புகிறேன். விரைவில் உங்கள் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன் என்றும், அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.