தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தோல்வியை கண்டவர் மு.க.ஸ்டாலின். ஆனால், அதற்கு அடுத்து, மேயர், சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் என்று பல்வேறு பதவிகளை பெற்ற இவரது அரசியல் வாழ்க்கை, கடந்த வந்த பாதையை தற்போது பார்க்கலாம்..
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கும், தயாளு அம்மாளுக்கும், 1953-ஆம் ஆண்டு, மார்ச் 1-ஆம் தேதி பிறந்தவர் தான் மு.க.ஸ்டாலின். இன்று 70-வது பிறந்த நாளை கொண்டாடும் ஸ்டாலின், சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில், தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார்.
பின்னர், விவேகானந்தா கல்லூரியில், PUC படிப்பையும், மாநிலக் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார். தனது தந்தையின் காரணமாக, சிறு வயதில் இருந்தே, நாடகக் கலையிலும், அரசியலிலும், மு.க.ஸ்டாலினும், ஆர்வம் இருந்தது. இவர் நடித்த முதல் நாடகமான முரசே முழங்கு பெரும் வெற்றியை பெற்று, வெள்ளி விழா கண்டது.
அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என திராவிட கொள்கைகளை விளக்கும் நாடகங்களிலும், மு.க.ஸ்டாலின் நடித்துள்ளார். இதேபோன்று, சினிமாவிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஸ்டாலின், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் ஆகிய திரைப்படங்களிலும், குறிஞ்சி மலர் என்ற நெடுந்தொடரிலும், நடித்துள்ளார்.
திமுக முதன்முறையாக ஆட்சியை பிடித்த, 1967-ஆம் ஆண்டில், பள்ளிப் படிப்பை படித்துக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், தனது நண்பர்களை ஒன்றாக திரட்டி, கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கி, சிறுவயதிலேயே, அரசியலில் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். 1968-ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில், திமுகவிற்காக தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து தான், அவருக்கு திமுகவில் முதன்முறையாக பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டது.
அதாவது, சென்னையின் 75-வது வட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 1980-ஆம் ஆண்டில், திமுகவின் இளைஞரணி அமைப்பாளராக அறிவிக்கப்பட்டார். முன்னதாக, 1976-ஆம் ஆண்டு அன்று, மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சென்னை மாநகரின் மேயராக 2-முறை பதவி வகித்த மு.க.ஸ்டாலின், 2006-ஆம் ஆண்டு, திமுக ஆட்சிக்கு வந்தபோது, உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர், 2008-ஆம் ஆண்டு, திமுக-வின் பொருளாளராக பதவி ஏற்றார்.
அதைத் தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு அன்று, தமிழகத்தின் துணை முதலமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். 2016 சட்டமன்ற தேர்தலில், 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், எதிர்கட்சி தலைவராக பதவி வகித்தார். இவ்வாறு படிப்படியாக வளர்ந்து வந்த மு.க.ஸ்டாலின், 2017-ஆம் ஆண்டு, கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் மோசமானதையடுத்து, அந்த கட்சியின் பொதுக்குழு மூலமாக, செயல் தலைவராக மாறினார்.
2018-ஆம் ஆண்டு, கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, திமுகவின் தலைவராக மாறினார். அதன்பிறகு, 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், 40-க்கு 39 என்ற கணக்கில், திமுக கூட்டணி கட்சியை அபாரத வெற்றி பெற வைத்தார். இதன் தொடர்ச்சியாக, 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்நாடு முதலமைச்சராக முதன்முறையாக பதவி ஏற்றார். இத்தனை தடைகளை தாண்டி, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள மு.க.ஸ்டாலின், தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.