ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், தமிழகத்தில் தற்போது 39 தொகுதிகள் உள்ளன. ஆனால், தற்போது நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
இதனால், தமிழகத்தின் மக்கள் தொகை அடிப்படையில், ஏற்கனவே உள்ள 39 தொகுதிகளில், 8 தொகுதிகள் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது என்றும், மக்கள் தொகை குறைவாக உள்ள காரணத்தால், நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வரும் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியலை கடந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.