முதல்வர் மருந்தகங்களை அமைப்பதற்கு விரும்புவோர், விண்ணப்பிக்கலாம் என்று, சமீபத்தில் அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. மேலும், இதற்கான தகுதியாக, மருந்துகள் சார்ந்த படிப்புகளை படித்திருக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட அளவில், சொந்தமாகவோ, வாடகைக்கோ இடம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு, பல்வேறு தரப்பினர் விண்ணப்பித்திருந்தனர். அதில், சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் ஆயிரம் மருந்தகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் கலந்துக் கொண்டு, காணொளி காட்சி வாயிலாக, மருந்தகங்களை திறந்து வைத்தார். இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கி, தரமான மருத்துவம் கிடைப்பதற்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், குறைந்த விலை மருந்துகள் கிடைப்பதற்காக தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அவர் கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், கல்வியும், மருத்துவமும், திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்றும் தெரிவித்தார். மேலும், நாட்டுக்கே தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது என்றும், மக்களுக்கு நன்மை செய்ய, திராவிட மாடல் அரசு கணக்கு பார்ப்பதில்லை என்றும் கூறினார்.